பேரறிஞர் லுக்மான் தமது மகனுக்குச் சொன்ன அறிவுரைகள் முழு உலகுக்கும் அவசியமானவை. ஆகவேதான் முழு உலக மக்களுக்கும் அறிவுரையாக இறக்கிய தன் வேதத்தில் அல்லாஹ் அறிவித்திருக்கிறான். ஒரு தந்தை மட்டுமல்ல, யாராக இருந்தாலும் யாருக்கு வேண்டுமானாலும் இந்த உபதேசங்களை நினைவூட்டலாம். இறைநம்பிக்கை, தனி நபர் ஒழுக்கங்கள், குடும்பம் மற்றும் சமூக வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய பண்புநலன்கள் என்று பலவற்றையும் லுக்மான் பேசியுள்ளார்கள். இஸ்லாமிய அறிஞர்கள் இவற்றுக்கு அழகிய விளக்கவுரையை எழுதியுள்ளார்கள். இந்த நூலின் தன்மை அந்த விளக்கவுரைகளைச் சுருக்கித் தருகிறது எனலாம். ஒவ்வோர் உபதேசத்திலும் நாம் அடைகின்ற நற்பலன்கள் என்னென்ன? இதையே ஷெய்க் அப்துற் றஸ்ஸாக் அல்பத்ர் அவர்கள் ஐம்பதாகத் தொகுத்தளிக்கிறார்கள். நல்ல அறிஞர்களை ரப்பானீ என்று கூறப்படும். அதாவது, ஒன்றைக் கற்பிக்கும்போது சிறிது சிறிதாகவும் முக்கியமானதை முதலில் முற்படுத்தியும் கற்பித்து பண்படுத்துபவரையே ரப்பானீ எனப்படும். ஷெய்க் அவர்கள் லுக்மான் எனும் ரப்பானீயின் உபதேசங்களை நமக்கு ஒரு ரப்பானீயாக இந்நூலில் முன்வைக்கிறார்கள்.