இந்த உலகம் இளைஞர்களின் உலகம். இங்கு எல்லா வயதிலும் மக்கள் இருந்தாலும், அந்த எல்லோரின் தாக்கமும் பெரியதாக வெளிப்படுவதில்லை. சிறுவர்கள் தங்களின் பெற்றோர்களைச் சார்ந்திருக்கிறார்கள். வயதானவர்கள் தங்களின் பிள்ளைகளைச் சார்ந்திருக்கிறார்கள். அதனால் இவர்களின் ஆற்றல் ஒரு கட்டுப்பாட்டுக்குள் நிற்கும். ஆனால், இளைஞர்கள் யாரையும் சார்ந்திருக்காத சுதந்திரத்துடன் இயங்குவதால், அவர்களின் ஆற்றல் செய்கின்ற மாற்றங்களை, அவை ஆக்கமோ அழிவோ, இந்த உலகில் தொடர்ந்து வெளிப்படுகிறது. பேராற்றல் மிக்கவனான அல்லாஹ் தன்னுடைய அடியார்களில் யாருக்கு நல்ல உடல் ஆரோக்கியத்தையும் தைரியத்தையும் வேகத்தையும் கொடுத்து ஆற்றலின் அருட்கொடையைப் பொழிந்திருக்கிறானோ, அவர்களால்தான் பல நற்செயல்களைச் செய்ய முடியும். இதற்குப் பொருத்தமான வயதில் இருப்பவர்கள் இளைஞர்கள் மட்டுமே. அவர்களில் ஆண்கள், பெண்கள் யாராக இருந்தாலும் அவர்களால் இந்த உலகம் பல நன்மைகளை அடைய முடியும். ஆனால், அதற்குத் தேவை அல்லாஹ்வின் வழிகாட்டல். நேர்வழியின் கல்வி. நல்லறிஞர்களின் அறிவுரை. இன்று இளைஞர், இளைஞிகளிடம் வெளிப்படுகிற எல்லாத் தீமைகளும் அழிவுகளும் அவர்களை வழிநடத்துகின்ற உந்துசக்தியிலிருந்தே உதிக்கிறது. எனவே, உலகம் பெரியதோர் அபாயத்தைச் சந்தித்தபடி இருக்கிறது. குடும்பங்கள் அச்சத்தில் இருக்கின்றன. தேசங்கள் சீரழிகின்றன. பெரும்பாவங்கள், ஆபாசங்கள், போதைகள், கேளிக்கைகளில் விழுந்து கிடக்கின்ற இளைய தலைமுறைக்கு நலன்நாடும் அழகிய வழிகாட்டியாக இஸ்லாம் இருக்கின்றது. இந்த உந்துசக்தியுடன் இயங்குவதற்கான நூலையே நம்முடைய பேரறிஞர் முஹம்மது ஸாலிஹ் அல்உஸைமீன் வழங்கியுள்ளார். வயது வித்தியாசமின்றி அனைவரும் வாசிக்க வேண்டிய நூல் இது.