நாடு என்பது மக்களின் வாழ்விடம். நாம் எல்லோருமே குடும்பம் குடும்பமாக வாழ்கிறோம். குடும்பத்தையும் நம்மையும் பாதுகாக்கச் சம்பாதிக்கிறோம். வீட்டுக்குள் நமக்கென்று ஒரு நிர்வாகம் இருக்கிறது. குடும்பத் தலைவர், தலைவி இருக்கிறார்கள். இருவரும் ஒன்றுபட்டு, ஒருவர்மீது ஒருவர் அக்கறையுடனும் பொறுப்புணர்ச்சியுடனும் குடும்பம் நடத்தும்போது அங்குப் பாதுகாப்பு இருக்கின்றது. என்னென்ன அபாயங்கள் குடும்பத்தைச் சீரழிக்கும் என்பதைத் தெரிந்துகொள்கிறோம். கவனமாக இருக்கிறோம். இந்த அறிவு இல்லாமல் போகும்போது நாமே அனுபவத்தில் அதன் பாதிப்பை அறிகிறோம். பிறகு சுதாரிக்கிறோம். நாடு, இந்தக் குடும்பங்கள் அனைத்தும் வாழ்கின்ற பூமி. இதற்கும் நிர்வாகம் இருக்கிறது. ஆட்சித் தலைவர் இருக்கிறார். கட்டுப்பாடுகள் இருக்கின்றன. குடிமக்களும் ஆட்சியாளரும் ஒருவரை ஒருவர் அக்கறையுடனும் பொறுப்புணர்ச்சியுடனும் நடந்தால்தான் இங்கும் பாதுகாப்பு இருக்கும். இல்லையெனில், சட்ட ஒழுங்குச் சீர்கேடுகளும் குழப்பங்களும் அமைதி இல்லாமையும் உருவாகிவிடும். விளைவு? ஒவ்வொரு குடும்பமும் அதிலுள்ள தாய் தந்தை, கணவன் மனைவி, குழந்தைகள், முதியவர்கள் என அனைவருமே இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு நிம்மதி இழப்பார்கள். இந்தப் புத்தகத்தில் ஷெய்க் அப்துற் றஸ்ஸாக் அல்பத்ர் ஒரு நாடு பாதுகாப்பாக இருப்பதற்கு இஸ்லாம் சொல்லியுள்ள அழகிய வழிகளை அறிவுரைகளாக வழங்கியுள்ளார்கள்.