வாய்க்கு வந்தபடி எதையும் பேசிவிடக் கூடாது என்ற எச்சரிக்கை உணர்வு ஒரு முஸ்லிமுக்கு வாழ்நாள் பூராவும் இருக்க வேண்டும். ஏனெனில், ஒவ்வொரு சொல்லும் விசாரணைக்கு உட்பட்டவையே. இதில் ஒரு முஸ்லிமைக் காஃபிர் என்று வசை பாடுவது கொடிய அவதூறு. அவரை இஸ்லாமியப் பாதுகாப்பு வளையத்தைவிட்டு வெளியே தள்ளிச் சாய்த்துக் கொல்லுவதற்குத் துணிகின்ற அக்கிரமம். வாய்க்கு வந்தபடி அல்ல, மனஇச்சைக்கு வசதிப்படி தீர்ப்பளிக்கின்ற இந்தக் கொள்கைக் குழப்பம்தான் நமது கலீஃபாக்களில் உஸ்மானையும் அலீயையும் கொலை செய்தது. நேர்வழி சென்ற கலீஃபாக்களையே இதனால் இழந்தோமெனில், மற்றவர்கள் எம்மாத்திரம்?
ஆனால் ஒரு சிரிப்பான முரண் என்னவெனில், இன்று இந்தச் சிந்தனையின் பாதிப்புக்கு ஆளானவர்கள் சிலர், பிற மதத்தவர்களைக்கூட காஃபிர்கள் என்று உடனே சொல்லிவிடக் கூடாது என்பவர்கள். இஸ்லாமிய அழைப்பு தரப்பட்டு, அதைக் காதுகொடுத்துக் கேட்டு, பின்பும் நிராகரிக்கக்கூடியவர்கள் மட்டும்தான் காஃபிர்களாம். அப்படியானால் பிற மதத்தவர்களுக்கு என்ன பெயர் என்று கேட்டால், முஸ்லிம் அல்லாதவர்கள் எனச் சொல்ல வேண்டுமாம். என்ன ஒரு வினோதம்! இந்த அளவு இறங்கிவந்து நூதனச் சிந்தனை விதியை மார்க்கத்தில் புகுத்தியவர்கள்கூட, ஒரு முஸ்லிமை மட்டும் காஃபிர் என்று துணிந்து உதறிப் பேசுவதில் உதறல் அடைவதில்லை. இது கொள்கை சார்ந்த நுட்பமான சட்டவிதிகளை அறியாத மடமையின் அழிச்சாட்டியம். இதில் அஹ்லுஸ் ஸுன்னா அறிஞர்கள் மிகத் தெளிவான நெறிமுறையை வகுத்திருக்கிறார்கள். இதன் எளிமையான தொடக்கநிலை விவரிப்புதான் ஷெய்க் ஸாலிஹ் இப்னு ஃபவ்ஸான் எழுதியுள்ள இந்நூல்.