நடக்கும்போது நாம் எடுத்துவைக்கின்ற அடுத்த அடி நம்மை வழுக்கித் தள்ளியே தீரும் எனத் தெரிந்தால் காலை அங்கு வைப்போமா? ஆனால், வாழ்க்கைப் பாதையில் நாம் பல விசயங்களில் கவனமில்லாமலே காலடி வைக்கிறோம். நேர்வழியின் தெளிவு இல்லாத அறியாமை. எனவே, விழுகிறோம்; பின்பு தப்பிக்க எழுகிறோம். அடுத்து இன்னொரு வழிகேட்டில் விழுகிறோம். சமயங்களில் அதன் பாதிப்புகளைக்கூட உணர முடியாத பித்துநிலையில் கிடந்துவிடுகிறோம். இது தனி மனிதர் முதல் சமூகம் வரை பாதிக்கின்றது. இந்நிலை தொடராமல் நம்மைப் பாதுகாக்க நமக்கான எளிய சீர்திருத்த வழிகாட்டி தேவையாகின்றது. ஷெய்க் முஹம்மது ஜமீல் ஸைனூ (ரஹ்) இந்நூலில் நமது பாதங்களை நேர்வழியின்மீது உறுதியாக்கும் முக்கியக் குறிப்புகளைக் குர்ஆன் நபிமொழியிலிருந்து தொகுத்தளிக்கிறார். கொள்கை சீர்திருத்தத்திலிருந்து தலைப்புகளைத் தொடங்கி வணக்க வழிபாடுகள், குடும்ப நலன், சமூக நலன், தனி மனித ஒழுக்கங்கள் என்று பல அம்சங்களில் நம்மையும் பிறரையும் சீர்திருத்திக்கொள்ள வழிகாட்டுகிறார். உலகின் பல மொழிகளில் வெளியாகி, பல இஸ்லாமியக் கல்விக்கூடங்களில் பாடங்களாக நடத்தப்படுகிற இந்நூல் இதன் சொல் முறையில் தனித்து விளங்குகிறது.