இறைத்தூதர்களின் வழிதான் நேர்வழி. ஏனெனில், அதுதான் ஒரே இறைவனாகிய அல்லாஹ்வின் வழி. அவனுடைய வேதங்கள் அனைத்திலும் வருணிக்கப்பட்ட சொர்க்கத்தின் வழி. இறைத்தூதர்கள் இந்த நேர்வழியின் பக்கம் மக்களை அழைத்தார்கள். ஆனால், ஏற்றுக்கொண்டவர்களைவிட நிராகரித்தவர்களே அதிகம். ஏற்றுக்கொண்டவர்களிலும் பின்பு தடம்மாறி வழிதவறியவர்கள் அதிகம். வழிதவறியவர்களிலும் எண்ணிக்கையால் பல கூட்டங்களாகப் பிரிந்தவர்கள் அதிகம். யூதர்கள் 71 கூட்டங்கள். ஒன்றுதான் சொர்க்கக் கூட்டம். கிறித்துவர்கள் 72 கூட்டங்கள். ஒன்றுதான் சொர்க்கக் கூட்டம். நாமோ 73 கூட்டங்கள். ஒன்றுதான் சொர்க்கக் கூட்டம். ஆனால் பாருங்கள், இந்த அனைவருமே இறைத்தூதர்களின் வழியை ஏற்றுக்கொண்டிருந்தும் பிரிவினையில் விழுந்துவிட்டார்கள். இது நம்மைச் சிந்திக்க வைக்கிறது. வழிதவறிய கூட்டங்கள் எப்படித் தடம்புரண்டார்கள்? அவர்களின் குழப்பங்கள் என்ன? வரலாறு என்ன? அவர்களைவிட்டு நம்மைக் காத்துக்கொள்வது எப்படி? – நேர்வழியின் பாதை கச்சிதமாக ஒற்றைப் பாதை. வழிதவறியவர்களின் பாதைகளோ குறுக்கும் நெடுக்குமாக நேர்வழியின் உடலைக் கூறுபோடும் பாதைகள். நமது சமகால மேதை ஷெய்க் ஸாலிஹ் அல்ஃபவ்ஸான் இந்த நூலில் சுருக்கமாக, எளிமையாக இதை விவரிக்கிறார்கள்.