மானுடத்தின் மீட்சியை இறைத்தூதர்கள் களமாடிய வரலாற்றுப் பாத்திரத்தின் வழிமுறையில் ஆக்கப்பூர்வமாய் வளர்த்தெடுப்பது இஸ்லாமிய நுண்ணரசியல். இதன் வேர்களும் கிளைகளும் விழுதுகளும் ஓரிறை வழிபாட்டை உரத்துச் சொல்லி பொய் தெய்வங்களைப் புறக்கணிக்கும் புரட்சிப் பாதையில் தழைத்தது. கொடி போல சுற்றி வளைத்துப் படர்ந்த இதன் இஸ்லாமியத் தலைமையின் கிடுக்குப் பிடியில் சர்வ தேச அரசியல் அதிகாரங்களும் கட்டுப்பாட்டுக்குள் விழுந்தன. இறையில்லம் கஅபாவில் தொழுவதற்கும் தடுக்கப்பட்ட நபிகளார், அடுத்த சில ஆண்டுகளில் அங்கிருந்த முந்நூற்று அறுபது சிலைகளை மட்டுமின்றி மொத்த அறபுலகச் சிலைகளையும் பாலை மண் குவியலுக்குள் புதைத்த வெற்றி வரலாறு இதன் நடைமுறைச் சாத்தியத்தை உண்மைப்படுத்தியது. ஒரு மின்சார பல்பினுள் ஒளிரும் இழை போல ஓர் ஆற்றல்மிகு வழிமுறை இந்த வெளிச்சப் பாய்ச்சலை மெல்லப் பரப்பி மக்களைக் கவர்ந்தது.
இதற்கு நேர் எதிரான வழிமுறைதான் அரசியல் இஸ்லாம். இது கம்யூனிஸ்ட்டுகளின் கிளர்ச்சி சிந்தனை போக்கில் குண்டக்க மண்டக்க குழப்ப நவீனங்களுடன் மக்களை உசுப்பேற்றி இஸ்லாமை வளர்த்தெடுக்கும் ஆர்வக் கோளாறு உணர்ச்சி அரசியல். முஸ்லிம்களைத் தற்கால வீழ்ச்சியிலிருந்து மீட்டெடுக்க இந்தச் சிந்தனைப் பாணியில் நூதனமான வியாக்கியானங்களை முன்வைத்தார்கள் மவ்லானா மவ்தூதி, சையிது குதுப் போன்றவர்கள். முஸ்லிம் அரசியலில், குறிப்பாக கிலாஃபத், மன்னராட்சி, ஜனநாயகம் போன்ற தளங்களில் விவாதங்கள் உருவானதிலும், இஸ்லாமியத் தூதுச்செய்தியைக் கொண்டு சேர்க்கின்ற அழைப்புப்பணி இதன் அடிப்படையில் திசை மாறி அரசியல்மயப்பட்டதிலும், தீவிரவாத அல்லது மிதவாதக் குறுங்குழுக்களால் முஸ்லிம் இளைஞர்கள் சிதறிப்போனதிலும் இவர்களது சிந்தனையின் பாதிப்புகள் கவலைக்கிடமானவை. மூச்சிறைக்க ஊதப்பட்ட ஒரு கவர்ச்சியான பலூனின் வெடிப்பு ஒரு சமூகத்தையே அதிர வைத்துவருகிறது. அரசியல் பாராசூட்டில் முஸ்லிம் சமூகம் முன்னேறி உயரும் என்ற நம்பிக்கை பலூனாகப் பெருத்துவருகிறது.