இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களின் சரித்திரம் இஸ்லாமிய ஓரிறைக் கொள்கையின் எழுச்சி சரித்திரம். ஒரு வலுவான இறைநம்பிக்கையின் வெளிச்சம் அறபுலகை மட்டுமின்றி, முழு உலகையும் தட்டி எழுப்பிய காலத்தின் அற்புத விடியலை அதில் காணலாம். திருக்குர்ஆன் எனும் இறைவார்த்தைகளின் ஒளிக்கீற்றுகள் ஒரு தனிமனிதரின் வாழ்க்கையிலும் சமூகத்திலும் எத்தனை இருள்களைத் துளைத்து ஊடுருவி துவம்சம் செய்தன என்பதையும் இந்தச் சரித்திரம் காட்டுகின்றது. உண்மை என்னவெனில், இறைவழிகாட்டலின் உயிரோட்டம் இந்த உலகின் எல்லா மைய நீரோட்டங்களையும் சுத்திகரித்துவிடும் ஆற்றலின் பிறப்பிடமாகும். நபிகளாரின் இலட்சியப்பணியில் அந்த ஆற்றலின் இயக்கத்தைத் தொடக்கம் முதல் இறுதி வரை உணர்கிறோம். இந்த நூல் சீறா எனும் நபி பெருமகனார் சரித்திரத்தின் ஆதிப் பிரதியைத் தழுவிச் சுருக்கமாக எழுதப்பட்டுள்ளது. எனினும், முதல் மனிதரும் இறைத்தூதருமான ஆதம் (அலை) அவர்களிலிருந்து தொடங்கி, இறுதித் தூதரான நபிகளாரின் இறப்புக்கும் பிந்திய இஸ்லாமிய ஆட்சிக்காலத்தின் ஒரு நூற்றாண்டு வரை தொட்டுப் பேசுகின்றது.